நினைவு பறவை

என்னுள்ளே இருந்து 
ஏகாந்தமாய் வாழ்ந்து 
சத்தமிட்டுச் சண்டையிடும் 
ஒற்றைப் பறவையை 

என்னசொல்லி ஆற்றுவது 
எப்படித்தான் தேற்றுவது 
தெரியாமல் தவிக்கிறேன் 
தினம்தோறும் நானும் 

உணவிட்டுப் பார்த்தும் 
ஏதேதோ செய்தும் 
ஓயாமல் ஒலிக்கிறது 
அடங்க மறுக்கிறது 

பெரியோர்கள் சொன்ன 
ஓராயிரம் வழிகளில் 
தினம்தோறும் முயல்கிறேன் 
ஏதேனும் ஒன்றை 

செப்படி வித்தைகள் 
செய்தும் பார்க்கிறேன் 
வீழாத பறவை 
கெக்களித்துச் சிரிக்கிறது 

ஓயாமல் சண்டையிட்டும் 
ஓங்கார கூச்சலிட்டும் 
தோற்றுத்தான் போகிறேன் 
இறுதியில் பறவையிடம்

 

 

--பிரியா