இருளும் ஒளியும்....

 
விடைபெற நினைத்தேன் 
முடிவாய் இன்று...
அடைபட்டு கிடந்த 
நீண்ட இருளிடம் 

முன்னேறி வருகிறேன் 
மூச்சைப் பிடித்தே 
வெளியே கசியும் 
வெளிச்சம் நோக்கி 

பிடித்திழுத்து நிறுத்தியது 
பின்நின்று ஒன்று 
திரும்பி தேடினேன் 
கண்படவில்லை ஏதும் 

உள்ளிருந்து ஒரு குரல் 
உரக்கச் சொல்லிற்று 
உற்றுப்பார் உன்னுள் 
தடுப்பது நீதான் 

உண்மைதான் உரைத்தது 
மறுப்பதற்கு இல்லை 
தடுத்தது என்னை 
மனதின் நடுக்கம் 

பயமென்ற ஒன்று 
உண்டிங்கு லேசாய் 
பயணத்தின் மீதல்ல
வெளிச்சத்தின் மீது 

வெளிச்சம் என்னும் 
உண்மை குறித்தும் 
உண்மை உரிக்கும் 
உன்னதம் குறித்தும் 

வெளிச்சம் உண்மையில் 
உணர்த்தியே செல்லும் 
நானென்பதை யாரென்றும் 
நீயென்பது இன்னதென்றும் 

அதுகண்டு தானே 
லேசாய் தயக்கம் 
பின்னி நிற்கும் 
கால்கள் இரண்டும் 

என்னுள் நீயும் 
உன்னுள் நானும் 
கொண்ட உண்மைகள் 
கொடிவிட்டு போகும் 

விருப்பமில்லை எனக்கு 
பிம்பங்கள் உடைவதில் 
அதற்காய் குறித்த 
நாளன்று இன்று 

இன்னும் கொஞ்சம் 
காத்து நிற்கிறேன் 
இருளினை உடைத்து 
 
ஒளியினை அடைய
 
 
 
--பிரியா