தாய்மையின் ஏக்கம்!

 
கருவினில் சுமக்கிறேன் 
கனவினில் தினமும் 
கனவு கரையாமல் 
நினைவாகும் நாள்நோக்கி 

சுமக்காமல் வளர்க்கிறேன் 
என்னுயிராய் உனை
சுமக்கும் சுகத்திற்காய் 
ஏங்கி ஏங்கியே!

துள்ளிக் குதிக்கும் 
மழலை ஒன்று 
ஓடியே திரியாதோ 
எந்தன் வீட்டிலும் 

கொல்லும் மழலையின் 
கொஞ்சல் பேச்சு 
எனக்கே சொந்தமாய் 
இல்லாமல் போனதால் 

தெருவெங்கும் தொலைகிறேன் 
தெரியாத உனைதேடி 
கண்மணியே சேரடி - என் 
கருவறையில் சீக்கிரம் 

பொல்லாத பூமியென்று 
வந்திட தயக்கமோ 
என்னிலும் மேலாய் 
உன்னைக் காப்பேன் 

தயக்கம் தொலைத்து 
சேர்ந்திடுவாய் என்னிடம் 
அன்னை உன்னை 
அன்பால் வளர்த்திடுவேன் 

உறக்கம் தொலைக்கிறேன் 
நிதமும் உனக்காய் 
அம்மா என்றழைக்கும் 
ஒற்றை சொல்லுக்காய் 

எப்படி அழைத்தால் 
நீ வருவாய்
அறியாமல் தவிக்கிறேன் 
அனுதினம் நானும் 

சாளரம் வழியே 
கசியும் கூச்சல் 
உடன் கலந்து 
உயிரின் ஓசையும்........