குமரகுருபரன் கவிதை

 
 
 
நினைவுகள் மேயும் வனத்தில் 
பூக்களிடம் உரையாடிக் கொண்டிருப்பவளிடம் 
கொஞ்சம் பாடல்கள் இருக்கின்றன.

சற்றுமுன் எழுதியவை ஆக இருக்கக் கூடும்.

அதிலொரு பாடல் வலியுடன் இருந்தது.
அதிலொரு பாடல் தனிமையுடன் இருந்தது.
அதிலொரு பாடல் அவநம்பிக்கையுடன் ஆரம்பித்தது.
அதிலொரு பாடல் பெருங்கோபத்துடன் சீறியது.
அதிலொரு பாடல் சாபம் கொடுத்தது.
அதிலொரு பாடல் யுகத்தின் கழுத்தை நெரித்தது.
அதிலொரு பாடல் கண்ணீரில் மிதந்தது.

அவள் பூக்களுடன் தான் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறாள்.

அவைகள் அவள் தோள் தழுவி கிசுகிசுத்துக் கொண்டிருந்தன.

எழுதப் படாத பாடல் ஒன்றில் இனி 
அவளின் சந்தோசம் இருக்கக் கூடும்.

எழுதப் படாத பாடல் ஒன்றில் இனி 
அவளின் வாழ்க்கை ஆரம்பிக்கக் கூடும்.

எழுதப் படாத பாடல் ஒன்றில் இனி 
அவளின் தீராக் காதல் தென்படக் கூடும்.

பூக்கள் அவளை காதலிக்கத் தொடங்கியிருந்தன.

அவள் புன்னகையைப் பெற்ற 
முதல் தருணத்தில் நான் இவ்வாறு சொன்னேன்.

நல்லது.

இனி நாம் இவ்வாறே நீடிக்கலாம் 
நீ பூக்களுடனும் 
நான் உன் புன்னகையுடனும்.

அவள் ஒரு பாடல் எழுத ஆரம்பித்தாள்.

நினைவுகள் மேயும் வனத்தில் 
பாடல் எழுதிக் கொண்டிருப்பவளிடம்
கொஞ்சம் காதல் மிச்சமிருக்கக் கூடும் வலியின்றி.



- குமரகுருபரன்

 

 

 

குமரகுருபன் கவிதைகளை அதிகம் ரசித்து படிப்பவள் நான்... அவருடைய பல கவிதைகள் என்னை கவர்ந்தவை அவற்றுள் இது மிகவும் கவர காரணம் இந்த கவிதையின் வரிகள் முழுவதுமாய் என்னை பிரதிபலிப்பதுபோல் உணர்கிறேன்....